தமிழகத்தில் அரசு சார்ந்த வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் 20 Support Person பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சமூகப் பணி, சமூகவியல், சட்டம், உளவியல் அல்லது குழந்தை வளர்ச்சி தொடர்பான துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாற்றாக, தொடர்புடைய துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்று குறைந்தது மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு மற்றும் சம்பளம்
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 42 என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊதியம் வழங்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் அறிவிப்புடன் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண் F0-06, தரைத்தளம், F Block, புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு – 603111 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி எப்போது?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.10.2026ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தைச் சென்றடைய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் காலக்கெடுவைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முக்கிய குறிப்பு: இது தற்காலிகப் பணியிடங்களுக்கான மாவட்ட அளவிலான ஆட்சேர்ப்பு. விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கல்வித் தகுதி, அனுபவம், ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகளை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும்.


