சென்னை: தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் மூன்று நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் மாவட்டத் தலைநகரங்களிலும், இரண்டாவது நாளில் கோட்ட அளவிலும், மூன்றாவது நாளில் வட்ட அளவிலும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.
பொது விநியோகத் திட்டத்திற்குத் தனியாக ஒரு துறையை உருவாக்க வேண்டும், அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் பொட்டலமாக வழங்க வேண்டும், அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் எடையாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், கல்வித் தகுதிக்கு ஏற்ற ஊதியம், பணியாளர்களுக்குத் தனி நிதி ஒதுக்கி மாதந்தோறும் சம்பளம் வழங்குதல், ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்குதல், கடைகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.
ரேஷன் பொருட்களின் எடை மற்றும் தரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு கடைநிலை ஊழியர்களை மட்டும் பொறுப்பாக்கக் கூடாது என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கிடங்குகளில் இருந்து வரும் பொருட்களை இறக்குவதற்கான செலவு, எடையிடும் பணிச்சுமை போன்ற பிரச்சினைகளையும் ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழகத்தில் 35,000-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. எனவே, இந்த வேலைநிறுத்த அறிவிப்பு பொதுமக்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில், அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்படும் என இப்போதே முடிவு செய்ய முடியாது. தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்குப் பல்வேறு சங்கங்கள் உள்ள நிலையில், அவற்றில் ஒரு சங்கம் மட்டுமே வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளதாக ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் அனைத்து கடைகளிலும் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, குடும்ப அட்டைதாரர்கள் தங்களது பகுதியில் உள்ள ரேஷன் கடையின் செயல்பாட்டை உறுதிப்படுத்திக் கொண்டு பொருட்களைப் பெறுவது நல்லது. வேலைநிறுத்தம் தொடர்பாக அரசு அல்லது கூட்டுறவுத் துறை வெளியிடும் அடுத்தடுத்த அறிவிப்புகளையும் பொதுமக்கள் கவனிக்க வேண்டும்.






